பதற்றம்
பதற்றம் (ஆங்கிலம்: anxiety) என்பது எதிர்மறையான நிகழ்வுகள் அல்லது அச்சுறுத்தல்கள் ஏற்படக்கூடும் என்ற எதிர்பார்ப்புடன் தொடர்புடைய அசௌகரியத்தையும் கவலையையும் முக்கியப் பண்புகளாகக் கொண்ட ஓர் உணர்ச்சி நிலை ஆகும். இந்த உணர்ச்சி நிலை உண்மையான அல்லது கருதப்படும் ஆபத்துகளுக்கான எதிர்வினையாகவும், வெளிப்படையான புறக் காரணங்கள் இல்லாமலும் ஏற்படலாம். பதற்றத்தையும் அச்சத்தையும் வேறுபடுத்திப் பார்ப்பது முக்கியம். அச்சம் ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது நிகழ்வுடன் தொடர்புடையது; பதற்றம் தெளிவற்றதாகவும் வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களுடன் தொடர்புடையதாகவும் இருக்கலாம்.
பதற்றத்தின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
-
நிச்சயமின்மை: பதற்றம் பெரும்பாலும் நிச்சயமின்மை மற்றும் எதிர்மறையான அல்லது அச்சுறுத்தக்கூடிய ஏதோ ஒன்று நிகழும் என்ற எதிர்பார்ப்புடன் தொடர்புடையது; ஆனால் அச்சுறுத்தலின் மூலம் தெளிவாக இல்லாமல் இருக்கலாம்.
-
உடலியல் எதிர்வினைகள்: வேகமான இதயத் துடிப்பு, வியர்த்தல், நடுக்கம், அதிகரித்த இரத்த அழுத்தம் மற்றும் பிற அறிகுறிகள் போன்ற உடலியல் வெளிப்பாடுகள் பதற்றத்துடன் ஏற்படலாம்.
-
உளவியல் வெளிப்பாடுகள்: பதற்றம் கவலை, இறுக்கம், அமைதியின்மை மற்றும் மனக்கலக்கம் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தலாம். பதற்றமடைந்தவர்கள் ஆபத்தைப் பற்றிய தொடர்ச்சியான எண்ணங்களையும் எதிர்காலத்தைப் பற்றிய கவலையையும் அனுபவிக்கலாம்.
-
தகவமைப்புத் தன்மை: சில சூழல்களில் பதற்றம் தகவமைப்புக்கு உதவுவதுடன், சாத்தியமான ஆபத்துக்கு உடலைத் தயார்படுத்தவும் உதவலாம். எனினும், பதற்றத்தின் அளவு மிக அதிகமாகவோ நீடித்ததாகவோ இருந்தால், அது ஒரு பிரச்சினையாக மாறலாம்.
-
பதற்றக் கோளாறுகள்: இயல்பான வாழ்க்கைக்கு இடையூறு விளைவிக்கும் அளவுக்குக் கடுமையான மற்றும் நீடித்த பதற்றம் இருந்தால், பதற்றக் கோளாறு கண்டறியப்படலாம். இத்தகைய கோளாறுகளில் பொதுமைப்படுத்தப்பட்ட பதற்றக் கோளாறு, சமூகப் பதற்றக் கோளாறு மற்றும் பிற கோளாறுகள் அடங்கலாம்.
-
சிகிச்சை: உளச்சிகிச்சை, மருந்துகள் மற்றும் தளர்வுப் பயிற்சி முறைகள் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் பதற்றத்திற்குச் சிகிச்சையளிக்கலாம். சிகிச்சையின் பயன்திறன் நோயாளியின் தனிப்பட்ட பண்புகளையும் அவரது பதற்றத்தின் இயல்புகளையும் பொறுத்தது.