மனச் சிக்கல்
மனச் சிக்கல் (ஆங்கிலம்: Complex) என்பது உணர்வுத் தீவிரம் கொண்ட எண்ணங்கள், கருத்துகள் மற்றும் நினைவுகளின் தொகுப்பாகும். இவை பெரும்பாலும் நனவுணர்வுக்கு அப்பாற்பட்டவையாக இருந்து, ஒருவரின் நடத்தை, உணர்வுகள் மற்றும் புலனுணர்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
மனச் சிக்கல்கள் அனுபவங்களின் அடிப்படையில், குறிப்பாகக் குழந்தைப் பருவத்தில் உருவாகின்றன; மேலும், அவை ஒருவரிடம் ஆழமான உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.
மனச் சிக்கல்கள் எதிர்மறையாகவும் நேர்மறையாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டாக, தாழ்வு மனப்பான்மை என்பது மற்றவர்களுடன் ஒப்பிடும்போது ஒருவர் தம்மைக் குறைந்த மதிப்புடையவராகவோ போதுமான அளவு நல்லவர் அல்ல என்றோ உணரும் நிலையாகும். இது குறைந்த சுயமதிப்பு, சமூகப் பதற்றம் மற்றும் பிற உணர்வுசார் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கலாம். மறுபுறம், உயர்வு மனப்பான்மை அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையையும் தமது குறைபாடுகளைப் புறக்கணிப்பதையும் ஏற்படுத்தக்கூடும்.
உளப்பகுப்பாய்விலும் ஆழ்நிலை உளவியலிலும் மனச் சிக்கல்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மனச் சிக்கல்களைப் புரிந்துகொண்டு அவற்றைச் சீர்செய்வது உளவியல் பிரச்சினைகளுக்குச் சிகிச்சையளிக்கவும் ஒட்டுமொத்த மனநலத்தை மேம்படுத்தவும் உதவக்கூடும் என்பதால், அவை பெரும்பாலும் சிகிச்சையில் பகுப்பாய்வு செய்யப்படுகின்றன.
குறிப்பிட்ட சூழ்நிலைகளில் ஒருவரின் நடத்தை மற்றும் எதிர்வினைகளில் மனச் சிக்கல்கள் வெளிப்படலாம். எடுத்துக்காட்டாக, தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவர் சமூகச் சூழ்நிலைகளைத் தவிர்க்கலாம் அல்லது விமர்சனத்திற்கு அளவுக்கு அதிகமாக மனம் புண்பட்டுப் பதிலளிக்கலாம். மனச் சிக்கல்களைச் சீர்செய்யும் பணி, மறைந்திருக்கும் இத்தகைய சிந்தனைக் கட்டமைப்புகளை நனவுடன் உணரச் செய்வதையும் வெளிப்புறத் தூண்டுதல்களுக்கான எதிர்வினைகளை மாற்றுவதையும் நோக்கமாகக் கொண்ட உளச்சிகிச்சை முறைகளைப் பெரும்பாலும் உள்ளடக்குகிறது.