உணர்வுசார் நுண்ணறிவு
உணர்வுசார் நுண்ணறிவு (EI) என்பது நமது சொந்த உணர்ச்சிகளையும் மற்றவர்களின் உணர்ச்சிகளையும் புரிந்துகொள்ளும் திறனைக் குறிக்கிறது. உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளுதல், வெளிப்படுத்துதல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் ஆகிய திறன்கள் இதில் அடங்கும். உணர்வுசார் நுண்ணறிவைப் பற்றிப் பேசும்போது, பின்வரும் 4 முக்கிய அம்சங்களைக் குறிப்பிடுகிறோம்:
சொந்த உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளுதல்: ஒரு குறிப்பிட்ட தருணத்தில் நாம் என்ன உணர்ச்சிகளை உணர்கிறோம், ஏன் அவ்வாறு உணர்கிறோம் என்பதை அறிந்துகொள்ளும் திறன் இதுவாகும். எடுத்துக்காட்டாக, ஒரு சூழ்நிலையால் நாம் தற்போது கோபமாக இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளும் திறன்.
மற்றவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளுதல்: மற்றவர்களின் முகபாவங்கள் மற்றும் சைகைகளிலிருந்து அவர்களின் உணர்ச்சிகளை அறிந்துகொள்ளும் திறன் இதுவாகும். அவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதை நாம் சிறப்பாகப் புரிந்துகொள்ள இது உதவுகிறது.
சொந்த உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துதல்: உணர்ச்சிகளுக்கு நாம் அளிக்கும் எதிர்வினைகளைக் கட்டுப்படுத்தும் திறன் இதுவாகும். எடுத்துக்காட்டாக, கடினமான சூழ்நிலையில் கோபத்தையோ மன அழுத்தத்தையோ கட்டுப்படுத்தும் திறன்.
மற்றவர்களின் உணர்ச்சிகளை ஒழுங்குபடுத்துதல்: மற்றவர்களின் உணர்ச்சி நிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் திறன் இதுவாகும். எடுத்துக்காட்டாக, கோபமாக இருக்கும் நண்பரை அமைதிப்படுத்துதல் அல்லது மோசமான நாளில் அவருக்கு ஆதரவளித்தல்.
‘உணர்வுசார் நுண்ணறிவு’ என்ற சொல் உளவியலில் பிரபலமடைந்துள்ளது; ஏனெனில், நமது உணர்ச்சிகள் நமது செயல்களையும் மற்றவர்களுடனான உறவுகளையும் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை விளக்க இது உதவுகிறது.